நிறங்களும்… நிழல்களும்…
நிறங்களும்… நிழல்களும்…
இன்று :
மணி 10, இரவு.
நண்பர்கள் hall-இல் தண்ணி அடித்துக்கொண்டிருகிறார்கள்.எனக்கு இந்த வாரம் முழுவதும் First Shift. காலை சீக்கிரம் எழவேண்டும். எந்த உருப்படியான வேலை இல்லாவிட்டாலும், காலை 6.30 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். வராத தூக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
Mobile-இல் Ring அடித்தது. சத்தம் கேட்டு சொருகிய கண்களுடன் Phone-ஐத் தேடினேன். அந்த பெயரை என்னால் அடையாளம் காண முடியவில்லை.கண்களை கசக்கி, மீண்டும் பார்த்தேன். அவன் தான்!!
“அவன் தான்” என்று கண்கள், முலைக்கு சாட்சியம் சொல்வதற்குள் Phone cut ஆனது.
“அவனது எண் இன்னும் என்னிடம் இருக்கிறதா?? ”
எனக்கே ஆச்சிரியமாய் இருந்தது. எதுக்கு இத்தனை நாள் கழிச்சி இப்போ call பன்றான்??
மீண்டும் Ring அடித்தது.
அவனே தான் மீண்டும்.
Silent-இல் போட்டுவிட்டு படுத்தேன்! தூக்கம் கலைந்தது. பார்த்து பார்த்து சமைத்த குழம்பில், சாப்பிடும் நேரத்தில் பல்லி விழுந்ததைப் போல, இதுவரை நான் தூங்க செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாய்ப் போனது. தூக்கம் வருவதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. சரக்கு அடித்துக்கொண்டிருந்த நண்பர்களை பார்த்து புன்னகைத்த படி , Cigarette ஒன்றை பற்றவைத்து, படியில் சென்று அமர்தேன். குளுமையான காற்று வீசிக்கொண்டிருந்தது. மனமும் காற்றுடன் கலந்து கரயத்துடங்கியது.
அன்று :
2 வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள்..
மணி 8, இரவு. சென்னை சாலிக்கிராமம் பேருந்து நிலையத்திற்கு அருகில் , நானும் என் 3 நண்பர்களும் சேர்ந்து வடைகைக்கு அந்த வீட்டை எடுத்திருந்தோம்.
சாத்தப்பா சாப்பிட போலாமா?இல்ல டா.. Pone பேசிக்கிட்டு இருக்கேன்.சரி நா கீழ wait பன்றேன்.நீ ஒரு வேல பண்ணு.. நீ சும்மா தான இருக்க..?? என் Purse- ல இருந்து ரூபா எடுத்துக்கோ. எனக்கு 2 பீர் வாங்கிக்கோ. சாப்பாடும் வாங்கிட்டு வந்துரு. நீயும் வேணா சாபுட எதாவது வங்கிக்கோ.
என்னிடம் எந்த பதிலும் எதிர்ப்பார்க்காமல் அவன் தன் உரையாடலைத் தொடர்ந்தான்.
மனம் வலித்தது. இந்த வீட்டை வாடகைக்கு எடுக்கும் போது எங்களில் யாருக்கும் வேலை இல்லை. ஒன்றாய் வேலைத் தேடினோம். ஒன்றாய் சாப்பிட செல்ல நேரம் இருந்தது. எங்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச நேரம் இருந்தது. பிரச்சனைகளைப் பேசி பேசி அவை கடைசியாய் சிரிப்பாய் மாறிய காலம் இருக்கின்றது. இப்போது ஏன் இந்து திடீர் மாற்றம்?!
இது இந்த வேலையாலா? இல்லை, வேலையை சுமக்கத்துடங்கிய மனிதர்களாலா?
இவர்களை சொல்லியும் ஒன்றும் ஆவப் போவதில்லை.ஒரு வேலை, எனக்கு வேலை கிடைத்தால் , காசு புரண்டால், இந்த “அலட்சிய” உணர்வு வந்து ஒட்டிக்கொள்ளும் போல.உலகில் உள்ள எல்லாமே தேவையற்றதாக , பாரமாக மாற்றி அலுப்பை தந்துவிடுகின்றது வேலை. அந்த அலுப்பை போக்கிகொள்ளவே பயன்படுகின்றது அந்த வேலை தரும் காசு.
எனக்கு மட்டும் வேலை கிடைக்காமல் இருப்பதால் ஏற்ப்பட்ட குற்ற உணர்வோ என்னமோ, இப்பொழுதெல்லாம் அவர்கள் சொல்வது அனைத்துமே என்னை அசிங்கப்படுதுவதாய் தோன்றுகின்றது.
மனிதர்கள் யாருக்கும் ஒரு வேலையும் இன்றி , காசு இல்லாமல் சுதந்திரமாக ஓர் தெரு நாய் போன்று திரிந்தால் எத்தனை அற்புதமாக இருக்கும். இங்கு நடப்பவை எல்லாம் ஒரு கனவாக இருந்தால் எத்தனை அழகாக இருக்கும். நான் இந்த கனவில் இருந்து விழிக்கும் வேலையில், எத்தனை சந்தோசமாக இருப்பேன்!!
“நீ சும்மா தான இருக்க..??”
அவன் கூரியது மனதில் பாரமாக இறங்கியது. எதுவும் பேச முடியவில்லை. பசித்த வயிற்றை மனது மறந்தது. நடக்க வேண்டும் போல் இருந்தது. செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினேன், நடக்க.
மனிதனிடத்தில் கடவுள் தோன்றியதற்கு காரணம் “இயற்கையின் மேல் உள்ள பயம்” என்று படித்திருக்கிறேன். எனக்கென்னவோ அதன் காரணம், அவன் மேல் அவனே கொண்ட பயமாக தோன்றுகிறது. மனிதன் தன்னை பற்றி தான் யோசிக்கவே பயப்படுகிறான் என்று தான் தோன்றுகின்றது. தான், தன் மனதிடம் பேசிக்கொள்ள பாவம் மனிதனுக்கு இருக்கும் ஒரே வழி கடவுள் தான்.
என்னுடைய கடவுள்கள் சாலைகளும், அவை தாங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களும் தான்.
எத்தனை எத்தனையோ முறை என்னை அழவைப்பதும், சமாதானம் செய்வதும் இந்த சாலைகளும், சாலை மனிதர்களும் தான்.
இருள் விழுங்கிய தெருக்கள். திடீர் திடீரென வந்து போகும் வாகனங்களின் வெளிச்சம்.தெரு ஓரமாய் , என்னை பின்தொடர்ந்து கொலைக்கலாமா? வேண்டாமா ? என்ற கொழப்பத்தில் என்னையே பார்த்துக்கொண்டிருந்த நாய்கள். நடந்து நடந்து சலித்துப்போன தெருக்களில் இருந்து மாறினேன்.
கொஞ்ச-நஞ்சம் கசிந்துக்கொண்டிருந்த வெளிச்சமும் துடைக்கப்பட்டது. நான் அந்த அறிமுகம் இல்லா சாலையில்,இருளுக்குள்ளே நடந்துக்கொண்டிருந்தேன்.
இருட்டினுள் ஒரு பெண்,சாலை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெண்ணிற Honda Activa-இன் மேல் அமர்ந்திருந்தாள். அவளின் இரு பக்கங்களில் இருந்தும் , வண்டி seat-இன் மேல் கை வைத்தவாறு ஒரு இளைஞன்.இதுவரை ஏதோ பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தவர்கள், என்னை பார்த்தவுடன் அமைதி ஆனார்கள். நான் தரையைப் பார்த்தவாறே அவர்களை கடந்து , மீண்டும் இருள் அணிந்த சாலையின் அமைதிக்குள் ஐக்கியமானேன்.
உலகில் மனிதர்கள் தோன்றி எப்படியும் 3000, 4000 ஆண்டுகள் இருக்குமே! இத்தனை ஆண்டுகளாய் மனிதன் வாழ்ந்தும், ஏன் இன்னும் துன்பங்கள் இருந்துகொண்டிருக்கின்றது??.
“நாதான!! பரவால வெக்கப்படாம சொல்லு!! என்ன செய்வ சொல்லு!?” கருநிற T-shirt-உம் , Jean-உம் அணிந்த ஒரு நபர், Phone-இல் பேசிக்கொண்டு, என்னை கடந்து சென்றார்.
உலகில் இருக்கும் அனைவரும் சந்தோசமாகத்தான் இருகின்றாகளா? நான் மட்டும்தான் இழிந்துபோய்விட்டேனா?? இழிவு! அசிங்கம்! ஏன் என் வாழ்வில் மட்டும் இத்தனை அசிங்கங்கள்?
மனம் சரியில்லை. யாரிடமாவது பேச வேண்டும் போல இருந்தது.அம்மாவிடம் பேசலாம்… அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுவிட தோன்றியது.சாலை ஓரமாய் இருந்த ஒரு பெட்டிகடையில் ,ஒரு Filter வாங்க Purse-ஐ துழாவினேன். Cigarette பற்றவைத்துக்கொண்டு,அம்மாவிற்கு call செய்தேன்.
முழு Ring அடித்தது. யாரும் எடுக்கவில்லை.ஒரு வேலை அம்மா சமைத்துக்கொண்டிருப்பாள்.மீண்டும் call செய்தேன். இரண்டாவது Ring-இல் Phone-எடுத்தாள்.
நான் : Hello!
அம்மா : என்னடா?? காசு வேணுமா? Phone பண்ற?
Call-ஐ cut செய்தேன். நடக்கத்துடங்கினேன்.கண்களில் இருந்து கண்ணீர் வழியத்துடங்கியது. இத்தனை அசிங்கப்பட்டும் இன்னும் சுவாசிக்கும் என் முகத்தை பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடப்பாறையை காய்ச்கி நெஞ்சில் இறக்கியது போல் வலித்தது. கண்ணீர் வழிந்து கொண்டிருந்த கண்களைத் துடைக்க மனம் வரவில்லை.
காற்றில் ஈரம் இல்லை. சுற்றி அடர்ந்த இருள் மட்டும் பரவிக்கிடந்தது.
“டே புண்டா மவனே… ”
குரல் கேட்டு, வந்த திசையில் திரும்பிப்பார்த்தேன். 45 வயது இருக்கும் அந்த பெண்மணிக்கு. யாரோ ஒரு ஆளைப்பார்த்து திட்டிக்கொண்டிருந்தாள்.மீண்டும் நடக்கத்துடங்கினேன். அங்கு சண்டை தொடர்ந்தது.
யார்… என்ன…. என்று தெரியாத தெருக்களில் நடை தொடர்ந்தது. அம்மா மீண்டும் call செய்வாள் என்று எதிர்பாத்தேன். ஏம்மாற்றம் தான் வந்தடைந்தது. அசிங்கமாக இருந்தது. எவர் கண்ணிலும் படாமல் இந்த இருளிலே கரைந்துவிட்டால் எத்தனை நன்றாய் இருக்கும். ஏதோ ஒரு கடை வீதியை வந்தடைந்தேன். கோயம்பேடு பின்புறம் செல்லும் பிரதான சாலை அது.கண்களை துடைத்துக்கொண்டே அங்கு இருந்த பேருந்து நிறுத்த நிழற்குடையின் மேடையில் அமர்ந்தேன்.
மேடையில் படுத்திருந்த பிச்சைக்காரன் தலை தூக்கி என்னை பார்த்துவிட்டு ,கால்களைச் சுரிக்கி படுத்துக்கொண்டான்.
கண்களில் இருந்து வழியும் நீர் நிற்கவில்லை. என் அருகே அமர்ந்திருந்த ஒரு பெண்மணி என் கண்களில் வழியும் நீரைப் பார்த்துவிட்டு, எழுந்து தூர சென்று நின்றுகொண்டாள்.என்னை பைத்தியம் என்று நினைத்திருப்பாள் போலும். எண்ணிக்கொள்ளட்டுமே!!! என்ன புதிய அசிங்கம் அடைந்துவிடபோகிறேன் இன்னமும்??
சில வருடங்களுக்கு முன் நடந்தவை நினைவிற்கு வந்தது.நான் Plus-2 முடித்துவிட்டு கல்லூரியில் சேர காத்திருந்த காலம். என் மதிப்பெண் சற்று குறைவு. பத்தாவதில் 86% வங்கியதுதான் தவறு!!. பத்தாவதில் 86% வாங்கிருந்ததால், Plus-2 வில் இன்னும் அதிகம் எதிர்பார்த்தார்கள். நானும் தான். வந்ததோ 84%. மனம் சரிந்து போய்விட்டது.இத்தனை கஷ்டப்பட்டு, எல்லாம் வீண் போய்விட்டதே என்ற துக்கம். யாரிடமும் நான் பேசவில்லை. என் பெற்றோரும் என்னிடம் பெருசாக பேசவில்லை.
அன்று காலை 10 மணி இருக்கும். ஞாயிற்றுக்கிழமை. வீட்டிக்கு Call வந்தது. அப்பா!
சொல்லுங்க…நா Booth-ல இருக்கேன். நீ உடனே இங்க வா! (நாங்கள் telephone Booth வைத்திருந்தோம்)
சாப்டுக்கிட்டு இருக்கேன்…….
Phone cut ஆனது. நான் கை கழிவிவிட்டு, செருப்பை அணிந்துக்கொண்டு Booth-ற்கு சென்றேன். அப்போது அவ்வளவாக cell Phone இல்லாத காலம். ஞாயிறு என்பதால் நல்ல கூட்டம்.
நான் உள்ளே சென்றேன். அப்பா கள்ளாவில் அமர்ந்திருந்தார். அவர் முன்னே அப்பாவின் நண்பர் ஒருவர் அமர்த்திருந்தார்.
கறிக்கடையில் இருந்து வந்திருப்பார் போல, கையில் ஒரு கருப்பு பாலித்தின் பை இருந்தது.
“என்ன கொட்டிக்கிட்டு இருந்தியா??”
அழைத்ததற்கான காரணம் ஒரு வாராக எனக்கு புரிந்தது. “ஆனால் வீட்டில் வைத்து செருப்பால் கூட அடிக்கட்டுமே… இங்க வேண்டாம்!!” எனக்குள்ளாகவே என் அப்பாவிடம் வேண்டிக்கொண்டேன்.
எந்த தெய்வத்திற்கு காது கேட்டிருக்கின்றது?! வசை தொடர்ந்தது.
“படிச்சிருந்தாதான் Mark வாங்கிருப்பியே!! நீ எங்க படிச்ச? கண்ட கண்ட நாய் கூட எல்லாம் ஊர் சுத்துறது. படிக்க சொன்ன எதாவது கத புத்தகத்த தூக்கி வச்சிக்குறது. எனக்கு அப்பவே தெரியும் நீ தேற மாட்டணு….”
Phone பெசிக்கொண்டிருந்தவர்களின் குரல் மட்டுமே Phone-ற்கு சென்றது. அவர்களின் கண்களும் மனதும் என்னை தான் கவனித்துக்கொண்டிருந்தன என்பது என்னை கண்களங்க வைத்திருந்தது.
“இவன் பொண்ணு 1060″ முன்னாடி இருந்த அவர் நண்பர் பக்கம் கை நீட்டினார். “சந்த்யவா? திவ்வியாவா?.. கணேசன் பொண்ணு..?! அவ கூட உன்ன விட அதிகம். உன்னால நான் அசிங்கப்பட்டு நிக்குறேன். அப்பவே படிச்சி படிச்சி சொன்னேன். எந்த நாய் என் பேச்சை கேக்குது?? எல்லாம் தெரிஞ்ச பெரிய மயிரு மாதிரிதான் திரியருது! போய் அவங்க மூதுரத்த குடி, வெக்கங்கெட்ட நாயே!”
என் அப்பாவை அத்தனை பேர் முன்னும் அறைய வேண்டும் போல் இருந்தது. நடப்பதை கவனிகாதவர்கள் போல் எல்லாரும் என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.என் மேல் எனக்கு மிகுந்த அறுவறுப்பு தோன்றியது. கண்களில் தர தரவென கண்ணீர் கொட்டியது.உடம்பு முழுக்க நடுங்கத்துடங்கி இருந்தது.என்னுள் முழுவது அறுவறுப்பும் வெட்கமும் தான். நான் என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் தோன்ற இல்லாதவனாய், தரையை பார்த்தவாறு அழுதுக்கொண்டு நின்றிருந்தேன். உலகமே மிக அமைதியாய் என் இழிவு நிலையை ரசித்துக்கொண்டிருந்தது.
“என்னத்துக்கு இன்னும் இங்க நிக்குற!? நடிக்காத!! போ.. போய் கொட்டிகோ!!”
நான் இப்போதுதான் முழுமையாய் உடைந்தேன். இத்தனை வருடம் என்னுடன் இருந்த என் அப்பாவிற்கு என் அழுகையின் வலி கூட நடிப்பாய் தான் தெரிகின்றதா?
நான் வீட்டை நோக்கி செல்லத் துடங்கினேன். அழுகையை நிறுத்த முடியவில்லை.. வழி நெடுக்க அழுகையை நிறுத்தமுடியாமல் போராடினேன்.நடந்தவை மீண்டும் மீண்டும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
“பெரிய மயிரு மாறி தான் திரியருது”
“போய் அவங்க மூதுரத்த குடி, வெக்கங்கெட்ட நாயே!”
“நிடிக்காத!!”..“நிடிக்காத!!”
சாலை முழுவதும் அழுத படியே வீடை அடைந்தேன். என்னை பார்த்த அம்மா பதற்றத்துடன் “என்னடா?? என்ன ஆச்சி” என்றாள். எதுவும் பேசாமல் படுக்கை அறைக்கு சென்று தாழிட்டேன்.
என் கண் முன்னாடி இருந்த பெரிய கண்ணாடி விகாரமான , அசிங்கமான என் முகத்தை எனக்கு காட்டிக்கொண்டிருந்தது. என் முகத்தை முதல் முதலில் வேருக்கதுடங்கிய நொடி அது தான்.
இன்று என் வீட்டை பார்க்கையில், எத்தனை எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது. ஆனாலும், ஆங்காங்கே ரசம் வெளுத்த அந்த பெரிய கண்ணாடி மட்டும் என் அறையில் அதே இடத்தில் தான் உள்ளது. அதை பார்க்கும் பொது, பல சமயம் என் முகத்தை விட என் வரலாறு தான் அதிகம் தெரியும் எனக்கு.
கன்னத்தில் கண்ணீர் வடிந்திருக்க அந்த பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தேன்.ஏன் இப்படி ஒரு இழிந்த பிறப்பை படைக்க வேண்டும் ? அதில் என்ன அப்படி ஒரு ஆனந்தம் படைத்தவனுக்கு?
கடவுளின் வக்கிர புத்தி வெறுப்பை தந்தது.
எதோ இடம் பெயர் கத்திக்கொண்டு, ஒரு Share-Auto என் முன் நின்றது. கருகருவென இருந்த ஆட்டோகாரர், வாயில் எதையோ குதப்பியவாறு என் முகத்தைப்பார்த்துவிட்டு, ஆட்டோவை கிளப்பினார்.
மணி 11, இரவு. நான் மீண்டும் வீட்டை நோக்கி நடக்கத் துடங்கினேன். நான் வீட்டை அடைந்த பொது மணி 1.30.
இதுவரை நான் பைத்தியம் ஆவாததர்க்கும், கொலையோ, தற்கொலையோ செய்யாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் ; நடை தரும் சோர்வும், மனது தரும் அழுகையும்.
சிறிது நேரம் கதவைத்தட்டியபின் அவன் கதவை திறந்துவிட்டான்.
“எங்க டா போன? மணி என்ன?! உனக்கு பிரச்சன இல்ல… நாள் எல்லாம் கூட தூங்கலாம்!”
என்று சொல்லிக்கொண்டே உள்ள போனவை பார்த்தபடி நான் வெளியே நின்றிந்தேன்.
இத்தனை நேரம் நான் சுமந்த அத்தனை அசிங்கங்களும் என்னுள் கோபமாக மாறியது. அவனை கொன்றே விட வேண்டும் போல் இருந்தது. எனக்கு ஏற்பட்ட அத்தனை அசிங்கத்திற்கும் அவன் ஒருவனே காரணம் என்பது போல், அத்தனை கோவமும் அவன் மீதே பாய்ந்தது. 8 மாதமாக ஒன்றாய் தான் வேலை தேடினோம். திடீரென்று நீ மாறினால், இதோ நானும் மாறுகிறேன். உன்னை மாற்றியது அந்த வேலை தானே!? என்னை அசிங்க படுத்துவது உனக்கு கிடைத்த அந்த வேலை தானே??
நான் உனக்கு வேலையே கிடைக்காமல் பண்ணிவிடுகிறேன் பார்!!
cigarette ஒன்றை பற்றவைத்தேன். அவன் தன் அறையின் கதவுகளை சாத்திக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான். சமையல் அரை தான் எங்கள் ஆஸ்தான கிடங்கு. அவன் சான்றிதழ்கள் இருந்த File-ஐ தேடி எடுத்தேன். அவனுக்கு இன்னும் Certificate Verification முடியவில்லை. முடியப்போவதும் இல்லை. முக்கியமான சான்றிதழ்களில் மூன்றை எரித்துவிடலாம் என்று file-ஐ எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.
“தப்பு பண்ற! அவன் என்ன பண்ணுவான்??! அவன் பாவம் டா. தெரியாம செய்திருப்பான்” அறிவில்லா மனம் உளறத்துடங்கியது.
அறிவுக்கும் மனதிற்கும் ஏற்படும் சண்டை அர்த்தமற்ற முட்டாள்தனம்.
எப்படியும் அறிவு தான் ஜெயிக்க போகின்றது என்று தெரிந்திருந்தும் , இந்த மனம் தன் வீண் முயற்சியை விடுவதில்லை.
“என்ன மயிற பாவம்?? அவன் பாவம்னா அப்போ நா என்ன?”
மனதிற்கும் அறிவிற்கும் வாக்குவாதம் வலுத்தது. அறிவு வென்றது.
கிழித்து தான் ஆகா வேண்டும். கடைசி cigarette அடித்துமுடித்தேன்.
எதுவும் தோன்றாமல் கொஞ்ச நேரம், மொட்டை மாடியில் படுத்திருக்க வேண்டும் போல் இருந்தது. படுத்திருந்தேன். மணி பார்த்த போது 4 ஆகி இருந்தது. கிழிக்க மனம்வரவில்லை.எதோ தோல்வி அடைந்தவனைப் போல அந்த file-ஐ இருந்த இடத்தில் வைத்தேன்.
இன்று :
மணி இப்போது 2, இரவு .
சில சமயங்களில் மனிதனின் சின்ன சின்ன “ம்” “ஊகும்” கூட மிக பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வேறு சில சமயங்களில் அவன் அழுது புரண்டால் கூட, ஒரு சிறு மாறுதலும் இல்லாமல் வாழ்கை தன் போக்கிற்கே அவனை ஓட்டி செல்கிறது.
அன்று அவன் File-லை கிழித்திருந்தால், இன்று அவனது வாழ்கை என்னவாக இருந்திருக்கும் என்று தெரியவில்லை. அனால் அவனது அத்தனைத் துன்பத்திற்கும் நான் தான் காரணமென, என் மனது என்னை வாட்டி கொன்றிருக்கும் என்பது மட்டும் தெரிந்தது.
காலை 6 மணிக்கு வேலைக்கு போக வேண்டும்.இன்னும் தூக்கம் வந்த பாடில்லை. கடைசியாக இருந்த cigarette-ஐயும் அடித்து முடித்து விட்டு , mobile-ல் இளையராஜா Playlist போட்டு விட்டு படுத்தேன்.
எங்கோ படித்த ஒன்று நினைவிற்கு வருகின்றது. “நாம் இந்த வாழ்கையை வாழ வில்லை. வாழ்கை நமக்கு நேர்ந்து கொண்டிருக்கின்றது”. எத்தனை உண்மையான வரிகள்!
எப்படியோ எந்த நேரமோ தெரியவில்லை. தூங்கிபோனேன்.
19/06/2013